Sunday, July 29, 2018

மரணம் பின் ஆத்மாவின் பயணம்:
கீழே சொல்லியுள்ளது மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பயணிக்கும் கதை மட்டும் அல்ல உண்மையி லேயே நாம் அனைவரும் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பதைக் குறித்து சாஸ்திரங்களிலும் அந்த காலத்திலும் என்னென்ன கூறி உள்ளார்கள் என்பதையும், அவற்றின் அடிப்படைக் காரணம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
1) பூவுலக வாழ்க்கைக்கு எப்படி பூதேவி, இந்திரன், அக்னி, வாயு மற்றும் வருணன் போன்றவர்கள் முக்கியமோ அப்படித்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்களையும் காப்பாற்ற பிரும்மனால் படைக்கப்பட்ட எட்டு வஸுக்கள் மற்றும் ஏகாதச ருத்திரர் மற்றும் துவாதசாதித்யர் போன்றவர்கள் முக்கியமானவர்களாக உள்ளார்கள். அந்த எட்டு வஸுக்கள் வஸு, ருத்ர, ஆதித்ய, ஸ்வரூபா, பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என்பவர்கள் ஆவர். அவர்களது பாதுகாப்பில்தான் இறந்தவர்களது ஆத்மாக்கள் அவர்களுக்கு கர்மம் ஆகும்வரை தங்கி இருக்கும் என்பதாக ஐதீகம் உண்டு.
2) சாதாரணமாக நோயினால் பீடிக்கப்பட்டு, வயோதிகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ சுய நினைவற்று மெல்ல மெல்ல சுவாசம் நிற்கும் நிலையில் வந்துவிட்டவர்களையும், மருத்துவர்கள் கைவிட்டப் பின், இன்னும் சில மணி நேரத்திலேயே மரணம் அடைய உள்ள நிலையில் உள்ளவரையும் சுற்றி உள்ளவர்கள் அவர்களுடைய மூச்சு நிற்கும்வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம் போன்றவற்றை பாராயணம் செய்தபடி இருப்பார்கள். சிலர் ராம நாமத்தை ஜெபித்தபடி இருப்பார்கள். ஆனால் அவற்றில் முக்கியமான ஒரு காரியத்தை அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் கூறி உள்ளன. அதை பலரும் அறிந்திருக்கவில்லை.
3) அந்த காரியம் என்ன என்றால் மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் இருந்தால் முடிந்தவரை மரணம் அடைய உள்ளவருடைய வலது காதில் பஞ்சாக்ஷர, அஷ்டாக்ஷரீ, மற்றும் சிவாய போன்ற மந்திரங்களை அவர்கள் சற்று நேரம் ஓதிக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி மந்திரம் ஓதுவதின் மூலம் உடம்பில் உள்ள ஐந்து பிராணன்கள் ஒன்றாகி வெளியேறும் என்பது ஐதீகம். அப்படி மந்திரம் ஓதத் தெரியாதவர்கள், அல்லது செய்ய முடியாதவர்கள் தம் வீட்டில் இவற்றை ஓதத் தெரிந்தவர் யாராவது இருந்தால் அவர்கள் மூலம் அந்த மந்திரங்களை ஓதலாம். சாதாரணமாக வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம் பஞ்சாட்சர மந்திரம் அல்லது சிவாய நமஹா எனும் மந்திரத்தை ஓதுவார்கள். அது தவறல்ல. ஆனால் மூத்த மகன் அதை செய்வதின் மூலம் மரணம் அடைய உள்ளவர் மனம் மேலும் அமைதி அடையும் என்பது நம்பிக்கை. இப்படி எல்லாம் செய்ய வேண்டியதின் அவசியம் அந்த ஆன்மா இறைவனையே எண்ணும்படியான சூழ்நிலையை அங்கே உருவாக்க வேண்டும் என்பதே.
4) அது மட்டும் அல்ல வீட்டில் கூடி உள்ளவர்கள் தொடர்ந்து சஹஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயணீயம், சுந்தரகாண்டம், ராம ராமா, கோவிந்த நமஹா … கோவிந்த நமஹா…. போன்றவற்றை உச்சரித்துக் கொண்டும் உரக்கப் படித்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்படி யாரும் இல்லை என்றால் ஒலி நாடாவில் போட்டு அதை அமைதியான சூழ்நிலையில் ஒலி பரப்பினால் அதுவும் நல்லதற்கே ஆகும். இது சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டதா என்ற தயக்கம் தேவை இல்லை. நாகரீகம் அதிகரிக்காத முன் காலத்தில் இப்படிப்பட்ட ஒலி நாடாக்கள் கிடையாது என்பதினால், மக்கள் மிக சாதாரண நிலையில் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்து வந்ததினால் இப்படிப்பட்ட சாதனங்களை பயன்படுத்தும் நிலையில் இருந்திடவில்லை, இப்படிப்பட்ட சாதனங்களும் இருந்திடவில்லை. ஆகவே இந்த காலத்தில் அவற்றை பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. அந்த சூழ்நிலையில் பகவான் நாம ஒலியே முக்கியம் ஆகும். இறக்கும் தருவாயில் உள்ளவர் அருகே கூடி உள்ளவர்கள் வாய் வழியே மட்டுமே நாமாவளியை நேரடியாக ஓத அல்லது பாடிட வேண்டும் என எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. அதற்கு விஞ்ஞான ரீதியிலான காரணமும் கிடையாது. மனிதர்கள் வாய் வழியே ஓதுவதற்கு இணையாக பகவானின் நாமகரணத்தை எந்த விதத்திலாவது அந்த இடத்தில் பரவ வைப்பதே முக்கியம் ஆகும்.

No comments:

Post a Comment