வ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்
ரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்கு காஸ்மோநாட் (cosmonaut) என்று பெயர். அமெரிக்கர்கள் தம் பங்குக்கு ஒரு பெயர் வைத்தார்கள் – அஸ்ட்ரோநாட் (astronaut). சீனா சும்மா இருக்குமா.. அவர்களும் தம் பங்குக்கு டேய்கோநாட் (taikonaut) என்று விண்வெளி வீரர்களை அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி விண்வெளி வீரர்களுக்கு ஆளுக்கு ஆள் பெயர் வைப்பதில் சமீபத்தில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. அந்த பெயர் தான் வ்யோமநாட் (vyomanaut).
இந்த வார்த்தையில் வ்யோம (व्योम) என்றால் வடமொழியில் ஆகாயம் – பூமிக்கு புறத்தே உள்ள வெளியை குறிக்கும். பாரதத்தில் இது போன்ற வடமொழி பெயர்கள் வைப்பது புதிதல்ல. நமது ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் கொள்கை வாசகங்கள் (motto) வடமொழியில்தான் இருக்கிறது.
வடமொழியில் வியா என்பது பரந்து விரிந்த என்று பொருள் படும். வியாபகம், வியாபித்தல் என்பன போன்ற சொற்கள் இதிலிருந்து வந்தது தான். திருவிண்ணகரத்து பெருமானுக்கு வ்யோமபுரீசன் என்று பெயர். சூரிய தேவனுக்கு வ்யோம நாதன் என்று (ஆதித்திய ஹ்ருதயம்) பெயர் உண்டு. சிவா பெருமானுக்கும் வ்யோம கேசன் என்று பெயர் உண்டு.
விண்வெளிக்கு மனிதனை அனுப்புகிற இந்தியாவின் முதன்முதல் முயற்சிக்கு நான்கு வ்யோமநாட்கள், இந்திய விமானப்படையிலிருந்து தேர்ந்தெடுக்கப் படப்போகிறார்கள். இந்த வீரர்களுக்கான பயிற்சி மையம் பெங்களூரில்தான் அமைய விருக்கிறது. இந்த பயிற்சியில் இருநூறு வீரர்கள் பங்கு கொள்வார்கள். அவர்களில் நால்வர் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
இந்த பெயரை முன் மொழிவதற்கு முன் பல்வேறு பெயர்களையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துக்குள் ஆராய்ந்துள்ளனர். ஆகாசகமி (आकाशगमि), அந்தரிக்ஷ யாத்ரி (अन्तरिक्षयात्री), ககனாட், விஸ்வநாட் போன்ற பல்வேறு பெயர்களையும் ஆலோசித்து கடைசியில் வ்யோமநாட் என்ற பெயரை தெரிவுசெய்துள்ளனர்.
No comments:
Post a Comment