கோடை காலம் வந்துவிட்டது. வெயில் எல்லோரையும் வாட்டி எடுக்கும். அப்போது ஏதாவது குளிர்ச்சியான பானம் அருந்துவதற்கு மிகவும் விருப்பமாக இருக்கும். அப்போது உங்கள் நினைவுக்கு வருவது என்ன? பல விதமான குளிர்பானங்கள் தானே?
மக்கள் சில குளிர்பானங்களை, தாகத்தைத் தீர்ப்பதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை. இந்தப் பானங்களைக் குடிப்பது என்பது உற்சாகம்,கொண்டாட்டம், இளமை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும், இவற்றைப் பருகுவது நாகரிகமான செயலாகவும், ஒரு தகுதியாகவும் கருதப்படுகிறது. எல்லா விழாக்களிலுமே இந்த குளிர்பானங்களைப் பருகும் வழக்கம் இன்று நடைமுறையில் உள்ளது.
குளிர்பானங்கள் அதாவது மென்பானங்கள் என்றால் என்ன? மேலும் மேலும் பருகத் தூண்டும் சுவையூட்டிகள், தித்திக்க வைக்கும் சர்க்கரைப் பொருட்கள், கண்ணைக் கவரும் வண்ண நிறமூட்டிகள், நறுமண ரசாயனங்கள், நுரைக்கச் செய்யும் கரியமிலவாயுபோன்றவற்றை நீரில் கலந்து தயாரிக்கும் ரசாயனக் கலவைதான் குளிர்பானங்கள். இவற்றில் ஆல்கஹால் சேர்க்கப்படுவதில்லை. எனவே இவை மென்பானங்கள் (Soft Drinks) என்று அழைக்கப்படுகின்றன. பெயருக்குத்தான் இவை மென்பானங்கள். ஆனால் இந்தப் பானங்களால் நம் உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பயங்கரமான தீமைகள் விளைகின்றன.
பொதுவாக சில குளிர்பானங்களில் சுவைக்காக செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட போஸ்போரிக் ஆசிட்(Phosphoric Acid),
சிட்ரிக் ஆசிட்போன்ற அமிலங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமிலங்கள் இனிப்புச் சுவையை நிலைப்படுத்தவும் செய்கின்றன.
இந்தப் பானங்களில் பல் ஒன்றைப் போட்டு வைத்தால், பத்தே நாட்களில் அந்தப் பல் முற்றிலும் கரைந்து மறைந்துவிடும். அந்த அளவுக்கு அமிலத் தன்மை கொண்டவை இந்தப் பானங்கள். நீங்கள் இந்தப் பானங்களைக் குடிக்கும்போது உங்கள் பற்களின் பாதுகாப்புப் பூச்சை(ENAMEL) இவை மெல்ல மெல்ல அரிக்கும். குடித்து ஒரு மணி நேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கும். நீங்கள் குளிர்பானங்கள் குடித்ததும் உங்கள் பற்கள் கூசுவதுபோல் இருக்குமல்லவா? அதற்குக் காரணம் இதுதான்.
சில குளிர்பானங்களில் கலக்கும் போஸ்போரிக் அமிலத்தின் தாக்கம் இன்னும் கடுமையானது. குளிர்பானங்களை நாம் குடிக்கும்போது நம் உடலுடன் கலக்கும் போஸ்போரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும். அப்படி வெளியேறும்போது அது தனியாக வெளியேறுவதில்லை. நம் பற்களிலும் எலும்புகளிலும் உள்ள கால்சியத்தைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. நம் பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான உறுதியை கால்சியம்தான் நமக்குக்கொடுக்கிறது. நாம் குளிர்பானங்கள் அருந்துவதன் மூலமாக நம் எலும்புகளிலும், பற்களிலும் உள்ள கால்சியம் கரைந்துபோகிறது. எனவே நம் பற்களும் எலும்புகளும் வலுவிழந்து உடையும் நிலைக்கு வந்துவிடுகின்றன. சிறுநீரில் கால்சியம் கரைந்து வெளியேறுவதால், இந்த கால்சியப் பொருட்கள் சிறுநீரகத்தில் கற்களாகப் படிகின்றன. இதனால் நமக்கு சிறுநீரகம் தொடர்பான ஆபத்துகளும் வருகின்றன.
சில குளிர்பானங்களில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளில் பெரும்பாலானவையும் கடும் நோய்களை ஏற்படுத்தக் கூடியவையாகும். சில குளிர்பானங்களில் சேர்க்கப்படும் "தார்ட்ராசின்' '( Tartrazing) எனப்படும் செம்மஞ்சள் நிறச் சாயம் நம் தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது புற்று நோய்க்கும் காரணமாகலாம். எனவே பின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில், இந்த நிறப் பொருட்களை குளிர்பானங்களில் சேர்ப்பதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். "கார்மொசின்' (Carmosine) எனப்படும் சிவப்பு நிறம், உணவில் நச்சுத் தன்மையை ஏற்படுத்துவதுடன் புற்று நோயையும் உண்டாக்கும்.
குளிர் பானங்கள் பெரும்பாலும், குளிர்ச்சியாகத்தான் விற்கவும் பரிமாறவும்படுகின்றன. குளிர்பானங்கள், குளிர் சாதனப் பெட்டிகளில் உறைந்துபோகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, சில குளிர் பானங்களில் "எதிலீன் கிளைக்கோல்' எனும் ரசாயனப் பொருள் சிறிதளவு கலக்கப்படுகிறது. இது சிறிதளவே கலக்கப்பட்டாலும் மெல்லக் கொல்லும் விஷத் தன்மை உடையதாகும். இந்த ரசாயனப் பொருள் கலக்கப்பட்ட பானத்தை ஒருவர் ஒரு மணி நேரத்தில் நான்கு லிட்டர் அருந்துவார் என்றால் அவர் மரணமடைந்துவிடக்கூடும்.
மொத்தத்தில் சில குளிர்பானங்களில் கலக்கப்படுபவைகளில் தண்ணீரைத் தவிர மற்ற யாவும் பயங்கரமான ரசாயனப் பொருட்கள்தான். இவ்வளவு ஆபத்துகளையும் சுமந்துவரும் குளிர்பானங்களை இனியும் நாம் அருந்த வேண்டுமா? கோடைகாலத் தாகத்தைத் தணிப்பதற்கு மட்டும் அல்ல, எப்போதுமே இளநீர், பதநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, மோர் போன்றவற்றை அருந்துவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை இல்லாதபோது இருக்கவே இருக்கிறது தண்ணீர். தண்ணீர் மிக அருமையான பானம்தான் அல்லவா!
பொ. ஐங்கரநேசன் எழுதிய "ஏழாவது ஊழி' எனும் சுற்றுச் சூழல் கட்டுரைத் தொகுப்பில் உள்ள "மென்பானங்களின் வன்முறைகள்' எனும் கட்டுரையின் சுருக்க வடிவம்(மொழி மாற்றப்பட்டது).
நன்றி : சிறுவர்மணி-தினமணி
நன்றி : சிறுவர்மணி-தினமணி